மக்களை வெகுவாக கவர்ந்த ஜங்ஷன் ரயில் பெட்டி உணவகம் மியூசியத்தையும் கண்டுகளிக்கலாம்

3 months ago 22

திருச்சி, அக்.4: திருச்சி ஜங்சனில் தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் ரயில் பெட்டி உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது. தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே மியூசியம் அருகே ‘‘ரெஸ்டாரென்ட் ஆன் கோச்’’ ‘‘ரயில் பெட்டி உணவகம்’’ நேற்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த உணவகம் குறித்து தென்னக ரயில்வே, திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: வழக்கமான உணவங்கள் போல் இல்லாமல் இந்த ரயில் பெட்டி உணவகம் முழுவதுமாய் ரயில் பெட்டியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரயிலின் சிறப்பம்சங்களை கொண்டே இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட வருவோர் 1859களில் இருந்து இப்போது வரை வளர்ச்சி அடைந்துள்ள தென்னக ரயில்வேவின் சிறப்பம்சங்களை அறியலாம்.

இந்த உணவகத்திற்கு வருவோர் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ரயில்வே மியூசியத்தையும் கண்டு மகிழலாம். இந்த மியூசியம் வாயிலாக மக்கள், ஆங்கிலேயர் காலம் முதல் தற்போதைய காலம் வரை வளர்ச்சி அடைந்த ரயில்வே துறையின் சிறப்பம்சங்கள் குறித்து அறியலாம். மேலும், பழங்கால கடிகாரங்கள், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள், அப்போதைய புகைவண்டி முதல் இப்போதைய டீசல் மூலம் இயங்கும் ரயில் இஞ்ஜின்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சிக்னல்கள், பழங்கால ரயில்வே தொழில்நுட்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் குறித்தும் அறியலாம்.

ரயில்வே மியூசியத்திற்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 13 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர். இப்போது இந்த ரயில்பெட்டி உணவகம் மூலமாக நம் திருச்சி ரயில்வே மியூசியத்தற்கு புதிய பொழிவு கிடைத்துள்ளது. இதன் மூலம் ரயில்வே மியூசியத்திற்கு வருவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மக்களை வெகுவாக கவர்ந்த ஜங்ஷன் ரயில் பெட்டி உணவகம் மியூசியத்தையும் கண்டுகளிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article