மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என கூறுவது தவறு: விஜய் மீது சீமான் கடும் தாக்கு

4 months ago 19

திருச்சி: மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என விஜய் கூறியது தவறு என சீமான் தெரிவித்தார். திருச்சி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேர் நேற்று ஆஜராகினர். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் பிரச்னையை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள், இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது.

அயோத்தியில் கடவுள் பெயரை கூறி தான் போட்டியிட்டீர்கள். ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நடிகர் விஜய் மிகப்பெரிய நடிகர். வெள்ள பாதிப்பு பகுதிக்கு விஜய் போகாதது எனக்கு வருத்தமில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவதை ‘சடங்கு’ என விஜய் கூறுவது தவறான வார்த்தை, அப்படி அவர் சொல்லக்கூடாது. அது கடமை, அது சமூக பொறுப்பு தான்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடுபத்தினரை ஏன் சென்று பார்க்க வேண்டும்?. கள்ளச்சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் இறந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஏன் பார்க்க வேண்டும். இதை சடங்கு என்று சொல்வதா, இது ஒரு சமூக பொறுப்பு. ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்பது போல் ஒரு துரோகம் இருக்காது. இந்தியா என்பது ஒரு நாடாக பல நாடுகளின் ஒன்றியம் 28 நாடு, 1 யூனியன் பிரதேசம் இதை எப்படி ஒரே நாடு என்று சொல்ல முடியும். ஒரே ரேசன் அட்டை, ஒரே வரி, ஒரே கல்வி கொள்கை என அனைத்தையும் எதிர்க்க வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான். அரசு நியமித்த துணைவேந்தர்கள் தேடுதல் குழுவை ரத்து செய்ய வேண்டும் என ஆளுநர் கூறுவது தவறானது. தமிழ்நாடு அரசிடமிருந்து, அதிகாரத்தை ஆளுநர் எடுத்து கொள்ள நினைக்கிறார். 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இயற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என ஆளுநர் கூறக்கூடாது ஒரு நியமன உறுப்பினருக்கு அதிகாரம் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது உதவுவதை சடங்கு என கூறுவது தவறு: விஜய் மீது சீமான் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Read Entire Article