தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதல்வராக பதவி ஏற்ற மு.க. ஸ்டாலின், வாக்குறுதிகளாக சொன்னது போக சொல்லாத பல மக்கள் நல திட்டங்களையும் அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. திட்டங்களை அறிவித்து செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவற்றின் செயல்பாடுகளை கள ஆய்வு செய்யும் முதல்வராகவும் மு.க. ஸ்டாலின் விளங்குகிறார்.
மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் என அந்த கள ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத்துறை ஆய்வுக் கூட்டங்களிலும் முதல்வர் வலியுறுத்தி வந்துள்ளார்.
‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின்படி அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் மாவட்டங்கள் தோறும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை முதல்வர் ஆய்வு செய்து வந்தார். அந்த பணிகளை இந்த மாதத்துடன் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இதனை நினைவுப்படுத்திய முதல்வர், ‘‘திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்’’ என்ற உறுதிமொழியை வழங்கினார்.
மேலும் அரசின் திட்டங்களை செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் தானே நேரில் களத்தில் இறங்கப்போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி, ‘‘தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நவம்பர் 5, 6ம் தேதிகளில் கோவைக்கு சென்று கள ஆய்வை தொடங்க உள்ளேன். மற்ற மாவட்டங்களிலும் கள ஆய்வு தொடரும். திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்’’ என நேற்று அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் திட்டங்களை அறிவித்துவிட்டு தலைமை செயலகத்தில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியும். ஆனால் அரசு அறிவிக்கும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா?, மக்களுக்கு சென்றடைந்துள்ளதா?, திட்டத்தினால் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?, திட்டங்களால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது? என்பதை நேரில் சென்று அறியவேண்டும் என நினைப்பதில் தமிழ்நாடு முதல்வருக்கு இணை யாரும் இல்லை எனலாம்.
அரசின் தலைமை அமைச்சராக இருக்கும் முதல்வரே நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளும்போது, அரசு இயந்திரம் எந்தளவிற்கு முழுவீச்சுடன் செயல்படும் என்பதை உணர முடியும். கோட்டையில் அமர்ந்துகொண்டு பெயரளவில் திட்டங்களை அறிவித்துவிட்டு தேர்தல் நேரத்தில் மேடையில் ஏறி வெற்று முழுக்கம் இடுவது எந்த பலனையும் தராது.
இதுபோன்ற நேரடி கள ஆய்வு மேற்கொண்டால்தான் மக்களின் நாடியை பிடித்து பார்க்க முடியும். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்று மக்களின் மனங்களை வெல்லமுடியும். அரசு நிர்வாகத்தை மேலும் செம்மைப்படுத்த நல்வாய்ப்பாக அமையும் என்பதை தமிழ்நாடு முதல்வர் நன்கு அறிந்து வைத்துள்ளார். அந்த வகையில் தனது நேரடி கள ஆய்வை தொடங்கி ‘மக்களுக்காகத்தான் அரசு’ என்பதை நிரூபிக்கப்போகிறார் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
The post மக்களின் அரசு appeared first on Dinakaran.