சென்னை : முதல்வரின் கள ஆய்வுப் பயணம் மக்களிடையே பெருத்த வரவேற்பையும், எழுச்சியையும் பெற்றுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை :
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மகளிர் விடியல் பயணத் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், அரசுப் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் மகளிர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், அதேபோல மாணவர்களுக்கு மாதம்1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், படித்து முடித்துள்ள இளைஞர்கள் வேலைவாயப்புகளுக்கு துணைபுரியும் நான் முதல்வன் திட்டம், ஆண்டுபலவாகியும் தீராத பிரச்சினைகளைத் தீர்த்து மக்கள் பயனடையச் செய்யும் மக்களுடன் முதல்வர் திட்டம், அரசுத் திட்டங்களால் அடைகின்ற பயன் ஏழை எளியோரைச் சென்றுசேர்ந்துள்ளதா என்பதைக் கண்டறியும், நீங்கள் நலமா திட்டம் முதலான பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை இந்தத் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் நிறைவேற்றி மக்களின் பேராதவைப் பெற்று வருகிறார்கள்.அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்ந்துள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காகக் கள ஆய்வில் முதலமைச்சர் எனும் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். அந்தத் திட்டத்தின்படி, இந்த ஆண்டில், நவம்பர் மாதத்தில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி, முன்னேற்றங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வேன் என கடந்த திங்களில் முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின்படி, முதன் முதலாக நவம்பர் 5, 6. ஆகிய நாள்களில் கோவை மாவட்டச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஆய்வு செய்தார்கள்.
அடுத்ததாக, விருதுநகர் மாவட்டத்தில் நவம்பர் 9, 10 ஆகிய நாள்களில் பயணம் மேற்கொண்டு கள ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த இரண்டு மாவட்ஙகளிலும் முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டபோது மக்கள் எழுச்சியுடன் திரண்டுவந்து மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பாராட்டினார்கள்.அதேபோல, மூன்றாவது முறையாக அரியலூர் – பெரம்பலூர் மாவட்டங்களில் 15.11.2024 அன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி ஏழை எளியோர்க்கு நலத்திட்டங்களை எல்லாம் வழங்கிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்கள் விழாக் கோலம் கொண்டு மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்த காட்சிகள் முதலமைச்சர் அவர்களின் திட்டங்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியைப் பறைசாற்றின.
ஜெயங்கொண்டத்தில் புதிய காலணி சிப்காட் தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் 1000 கோடி ரூபாய் முதலீட்டான புதிய காலணிகள் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார்கள். இந்தக் காலணி தொழிற்சாலை 15,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய அருமையான திட்டமாகும். ஜெயங்கொண்டம் பகுதியைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் பெருகி அப்பகுதி பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு வழிவகுக்கும் மகத்தான திட்டமாகும்.இந்தக் காலணி தொழிற்சாலைக்கு அருகே வசித்துவரும் மிகவும் ஏழ்மைநிலையிலுள்ள பழங்குடியின மக்களுக்கு 3.52 ஹெக்டேர் நிலத்தில் இலவச வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயத்தப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ம் பழுப்பு நிலக்கரி அனல்மின் உற்பத்தித் திட்டத்திற்காக 2005-ஆம் ஆண்டு வரை 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 8,373 ஏக்கர் நிலம் அனல் மின் திட்டத்தை செயல்படுத்திட சாத்தியமில்லை என்ற முடிவு எட்டிய பிறகு 25 ஆண்டுகளாகக் காத்திருக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிலமதிப்புத் தொகையைத் திரும்பப்பெறாமல் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது. இவை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட ஒருநாள் பயணத்தின் விளைவாக அரியலூர் மாவட்டம் பெற்றுள்ள முக்கியமான பயன்களாகும்.
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்ட 2-ஆம் கட்டத் தொடக்க விழா
குழந்தைகள் பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்ளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை 21.5.2022 அன்று நீலகிரி மாவட்டத்தில் முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். அத்திட்டத்தில் பயன்பெற்ற 77.3 விழுக்காடு குழந்தைகள் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி திட்டம் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்டமாக 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத்தின் 2-ஆம் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இந்தத் திட்டத்தில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள 76,075 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சிக்குப் பெருந்திரளாக வருகைதந்த மகளிர் கூட்டம் முதலமைச்சர் அவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் எங்கள் குழந்தைகளும் நாங்களும் நலம் பெறுவோம் என்று கூறி நெகிழ்ந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே நாளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அந்த விழாவில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். ரூ.88 கோடி மதிப்பீட்டிலான 507 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்தார்கள். ரூ.170 கோடிமதிப்பில் 21 ஆயிரத்து 862 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களின் மக்கள் எழுச்சியோடு பெருந்திரளாக வருகை தந்து முதலமைச்சர் அவர்களை வாழ்த்திப் பாராட்டினார்கள். அவர்கள் முகத்தில் கண்ட மகிழ்ச்சியைக் கவனித்த முதலமைச்சர் அவர்கள் บง அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றும்போது, “நான் பிரச்சினைகளை நேர்கொண்டு நிற்கிறேன். அந்தப் பிரச்சினையை தீர்க்கிறேன். மக்களுக்காகப் பார்த்துப் பார்த்துத் திட்டங்கள் தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்னால் சொன்ன நாட்களுக்குள் திட்டங்களைத் திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். எங்கள் குறைகளைப் போக்குவார் என்ற நம்பிக்கையோடு தேடிவந்து மனுக்களை கொடுக்கிறார்கள், அந்த நம்பிக்கையை எந்நாளும் காப்பாற்றுவேன் காப்பாற்றுவேன் என்று உறுதி தருகிறேன்”. என பெருமிதத்தோடு குறிப்பிட்டார்கள்.
முதலமைச்சர் அவர்கள் கூறியதைக் கேட்டதும் மக்கள் எழுப்பிய மகிழ்ச்சி ஆரவாரம் முதலமைச்சர் அவர்களின் மீது, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.
அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.விழா ஏற்பாடுகளை எல்லாம் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தார்கள். முதலமைச்சர் அவர்கள் அதைக் குறிப்பிட்டுப் பேசும் பொழுது, என்னால் வார்ப்பிக்கப்பட்ட அரியலூர் அரிமா அமைச்சர் சிவசங்கர் என்று பாராட்டினார். மொத்தத்தில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒருநாள் அரியலூர் பெரம்பலூர் மாவட்டச் சுற்றுப் பயணம் அப்பகுதி மக்களிடையே மட்டுமல்ல, அம்மாவட்ட மக்களிடையே மட்டுமல்ல தொலைக்காட்சிகள் வாயிலாக நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் இந்த அரசின் மீதும் முதலமைச்சர் அவர்கள் மீதும் மிகுந்த பெருமிதம்கொள்ளச் செய்த வெற்றிப் பயணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
The post மக்களிடம் பெருத்த வரவேற்பையும், எழுச்சியையும் ஏற்படுத்திய முதல்வரின் வெற்றிப் பயணம் : தமிழக அரசு appeared first on Dinakaran.