மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு

3 hours ago 3

புதுடெல்லி: மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். மக்களவை நேற்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின் போது திமுக எம்பிக்கள் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்ப முயன்றனர். ஆனால் சபாநாயகர் ஓம்பிர்லா அதற்கு அனுமதி தரவில்லை. ‘‘இந்த பிரச்னை இப்போது எழவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் எதுவும் தொடங்கப்படவும் இல்லை’’ என்றும் ஓம்பிர்லா கூறினார். ஆனாலும், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டின் கவலை குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். அப்போதும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டி அளித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ‘‘மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பல மாநில முதல்வர்களை அழைத்து பேச இருக்கிறார். எனவே இந்த பிரச்னை குறித்து ஒன்றிய அரசின் விளக்கம் வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை’’ என்றார்.

இதே போல மாநிலங்களவையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், ஒரே எண்ணில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது குறித்தும் விவாதம் நடத்தக் கோரி திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இவ்விரு நோட்டீசையும் அவைத்தலைவர் நிராகரித்தார். எனவே, இவ்விவகாரங்கள் குறித்து குறுகிய கால விவாதத்தையாவது நடத்த வேண்டுமென திமுக எம்பி திருச்சி சிவா வலியுறுத்தினார். அதற்கு அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், ‘‘இப்பிரச்னைகளை, கூட்டத்தொடரின் பட்டியலிடப்பட்ட அலுவல்களின் போது எழுப்பலாம்’’ எனக் கூறி விவாதம் நடத்தவும் அனுமதிக்கவில்லை.

The post மக்களவையில் தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு: திமுக எம்பிக்கள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Read Entire Article