மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது சென்னை அமர்வு நீதிமன்றம்

3 months ago 28

சென்னை,

ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய பிற்போக்குத்தனமான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சு குறித்து மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஜாமீன் கோரி மகாவிஷ்ணு சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில்தான் பேசவில்லை எனவும், தனது பேச்சு அவர்களை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறியிருந்தார். மேலும், தனது பேச்சு எடிட் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்டதாகவும், முழு பேச்சை கேட்காமல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு முதலாவது கூடுதல் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதி (அதாவது இன்று) நீதிபதி தள்ளிவைத்தார்.

அதன்படி, மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Read Entire Article