ஜல்காவ்: மகாராஷ்ரா மாநிலம் ஜால்காவ் அருகே சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியை நம்பி, அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி அருகிலிலுள்ள தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் 12 பேர், அந்த வழியாக வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் மோதி பலியாகினர். லக்னோவில் இருந்து மும்பைக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பசோரே அருகே மகேஜி – பர்தாடே ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்ததாக பயணிகளிடையே புரளி பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடனே அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயில் நின்றதும், தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தனர். அருகே இருந்த மற்றொரு தண்டவாளத்தில் அனைவரும் கூடி நின்று, ரயிலின் எந்தப் பெட்டியில் புகை வருகிறது என பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி சென்ற கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் பலர் ரயிலில் சிக்கி அதே இடத்தில் இறந்தனர். பலர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு 8 ஆம்புலன்சுகள் விரைந்தன. காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
ரயிலில் தீப்பிடித்த புரளியை நம்பி ரயிலை விட்டு இறங்கியவர்கள் உறவினர்கள் மற்றும் பிற பயணிகள் கண் முன்பே மற்றொரு ரயிலில் அடிபட்டு இறந்ததை பார்த்து பலர் கதறி அழுதனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சம்பவம் பார்ப்போரை பதை பதைக்கச் செய்தது. ரயிலுக்கு அடியிலும், தண்டவாளத்துக்கு அருகேயும் உயிரிழந்த பயணிகளின் உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கும் வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள். விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் அறிவித்துள்ளார். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
* ரயிலில் தீப்பிடித்தது உண்மையா?
லக்னோவில் இருந்து மும்பை நோக்கி வந்த புஷ்பா ரயிலில் இருந்து புகை வெளியே வந்ததன் காரணமாகவே, பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதாக தெரிகிறது. உண்மையிலேயே அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் புகை வெளியேறியதா? அதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மகாராஷ்டிராவில் பயங்கரம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 12 பேர் பலி: தீப்பிடித்ததாக கருதி ரயிலை விட்டு இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து appeared first on Dinakaran.