மும்பை: மகாராஷ்டிராவில் நாளை பட்ஜெட் கூட்டம் கூடும் நிலையில், கடுமையான வெயிலில் பனிப்போர் சாத்தியமா? என்று கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு ஏக்நாத் ஷிண்டே கிண்டலாக பதிலளித்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பாஜக கூட்டணியில், தேேவந்திர பட்நாவிஸ் (பாஜக) முதல்வராகவும், அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 10ம் தேதி சமர்ப்பிக்கப்படும். இதற்கிடையே முதல்வர் பட்நாவிசுக்கும், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும், முக்கிய கூட்டங்களில் இருவரும் சந்திப்பதில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மூன்று தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘எனக்கும், முதல்வர் பட்நாவிசுக்கும், துணை முதல்வர் அஜித் பவாருக்கும் இடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. கூட்டணிக்குள் மோதல், விரிசல், பனிப்போர் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் (செய்தியாளர்கள்) எழுதினாலும், எங்களது கூட்டணி உடையப் போவதில்லை. வெயில் கடுமையாக இருக்கும் போது பனிப்போர் எப்படி சாத்தியமாக இருக்க முடியும்? எங்களுக்குள் எல்லாம் சரியாகத் தான் செல்கிறது. எங்களுக்குள் இருக்கைகளை மாற்றிக் கொண்டோம். நானும், பட்னாவிஸ் மட்டுமே பதவிகளை மாற்றிக்கொண்டோம். அஜித் பவார் அதே பதவியை தொடர்கிறார். முந்தைய ஆட்சிகாலத்தில் நிலுவையில் இருந்த திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம். அஜித் பவார் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்வார். எங்களுக்குள் எவ்வித போரும் இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம் என்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்’ என்று கூறினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மூவரும் கிண்டலாக மாறிமாறி பதிலளித்தனர்.
The post மகாராஷ்டிராவில் நாளை பட்ஜெட் கூட்டம் கூடுகிறது; கடுமையான வெயிலில் பனிப்போர் சாத்தியமா?: கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு ஷிண்டே கிண்டல் appeared first on Dinakaran.