மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்!

1 month ago 7

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

முதல்வர், துணை முதல்வர் பதவிகள், அமைச்சரவை இடங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் அக்கூட்டணி கட்சியினரிடையே தாமதம் ஏற்பட்டதால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கூட்டணியில் 132 இடங்களில் வென்ற பாஜ, முதல்வர் பதவியை ஏற்க விரும்பியது. அதேநேரம், முதல்வர் பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதித்துறை மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்தது.

இந்த சூழலில் நேற்று பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் பாஜ சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்நவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அமைச்ர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, பட்நவிஸ், ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தனர். அவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார். தேவேந்திர பட்னவிஸுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார்.

மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் ஷாருக் கான்,சல்மான் கான், சன்ஞய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக 3-வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர பட்னவிஸ்! appeared first on Dinakaran.

Read Entire Article