மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது

3 months ago 20

புதுடெல்லி: சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 32 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி 26 சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில்,‘‘ மகாராஷ்டிரா,புனேயில் வி.சி. இன்கான்போர்மிட்டிஸ் பிரைவேட் லிமிடெட்,விசாகப்பட்டினத்தில் வி.சி. இன்புரோமெட்ரிக்ஸ் பிரைவேட் லிமிடெட்,ஐதராபாத்தில் வியாஜெக்ஸ் சொல்யூசன்ஸ்,விசாகப்பட்டினத்தில் ஆட்ரியா குளோபல் சர்வீசஸ் லிமிடெட் ஆகிய கால்சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கால் சென்டர்களில் பணியாற்றும் ஊழியர்களின் தொலைபேசி பேச்சுக்களை இடைமறித்து கேட்ட போது சைபர் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து ஆபரேஷன் சக்ரா-3 என்ற பெயரில் மகாராஷ்டிரா,குஜராத், தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் 32 இடங்களில் கடந்த 26ம் தேதி ஒரே சமயத்தில் சோதனை நடந்தது. இதில் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்’’ என்றனர்.

இதுகுறித்து சிபிஐ செய்திதொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், கால் சென்டர்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குவதாக கூறி அமெரிக்காவில் உள்ள பயனர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது. அதில் இருந்து ஏராளமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளனர். எனவே உங்களுடைய நிதியை பாதுகாப்பதற்கு புதிய வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி கூறியுள்ளனர். இதை நம்பிய பலர் பணத்தை புதிய வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமான தொகையை இழந்துள்ளனர். இது தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி 26 சைபர் குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.58.45 லட்சம் ரொக்கம்,லாக்கர் சாவிகள், 4 ஆடம்பர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article