மகாத்மா காந்தியும் கல்வியும்

1 month ago 10

மகாத்மா காந்தி நாட்டு விடுதலைக்கு போராடியதற்கு இணையாக நம் நாட்டுக் கல்விமுறை குறித்து பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் வலியுறுத்தியவர். ‘கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கான வழியாக இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால் காந்தி அன்றே கல்வி என்பது தனிநபருக்கான விடுதலையைப் பெற்றுத் தருவதாக அமைய வேண்டும்’ என்று விரும்பினார். தொழிற்பயிற்சியுடன் கல்வியையும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொழில் பயிற்சி என்பது சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும் என்பது அவர் கருத்து.

காந்திஜியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி சர்வதேச அமைதி தினமாக உலகமே கொண்டாடும் வேளையில் கல்வி குறித்த அவரின் பார்வையை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.காந்தி சமத்துவத்தை அடைவதற்கான கருவியாகக் கல்வியைக் கருதினார். இந்திய சமூகத்தில் பெண்களுக்கும், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பட்டியல் இனக் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்று குறிப்பிட்டார். விடுதிகளும், பள்ளிகளும் மாணவர்களைச் சாதி அடிப்படையில் பிரிக்கக் கூடாது, ஆனால், உள்ளடக்கிய நிறுவனங்களாகச் செயல்பட வேண்டும், என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பல முரண்பாடுகளைக் கொண்ட தற்காலக் கல்வி முறைக்கு மாற்றாக, அனைவருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தை காந்தி முன்மொழிந்தார். இதுவே அடிப்படைக் கல்விக்கான வார்தா திட்டமாக வளர்ந்தது. ‘அடிப்படைக் கல்வி’ என அறியப்படும் வார்தா கல்வித் திட்டம், இந்தியாவில் தொடக்கக் கல்வித் துறையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. கல்வியின் மூலம் இளைஞர்கள் சிறந்த குடிமக்களாவதற்கான இலட்சியங்களைக் கற்பிக்க வேண்டும், என்று காந்தி கருதினார்.

1937 இல் வார்தா மாநாட்டில் தேசத்தின் முன் அடிப்படைக் கல்வி பற்றிய தனது கருத்துக்களை காந்தியடிகள் முன்வைத்தார். ஒரு விரிவான உரையாடலுக்குப் பிறகு, துறை வல்லுநர்கள் மற்றும் அமைச்சர்கள் பின்வரும் முடிவுகளை எடுத்தனர்.

1.நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
2.தாய்மொழி வழியில் கல்வி பயிற்றுவிக்க வேண்டும் .
3.உள்ளூர் நிலைகளுக்கு ஏற்ற சில வகையான கைமுறை உற்பத்தி வேலைகளை மையமாகக் கொண்ட கல்வி வழங்கப்படும்.

வார்தா மாநாடு, கல்விக் கொள்கையை மறுசீரமைப்பதன் அவசியம் குறித்த விவாதங்களுக்கு வழிவகுத்தது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் விரிவான கல்வித் திட்டத்தையும் பாடத்திட்டத்தையும் தயாரிப்பதற்காக டாக்டர்.ஜாகிர்உசேன் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அக்குழு தனது அறிக்கைகளை இரண்டு கட்டங்களாக சமர்ப்பித்தது, இந்த அறிக்கை இன்றும் தொடக்கக் கல்வியின் அடிப்படை ஆவணமாகக் கருதப்படுகிறது. அதுவே வார்தா கல்வித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.அறிவை நம் வாழ்வோடு இணைக்காமல் புத்தகங்களிலிருந்து மட்டுமே கற்றுக்கொள்வதை காந்தியடிகள் விரும்பவில்லை.

கல்வியின் மூலம் இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக வளர உதவும் சில இலட்சியங்களைக் கற்பிக்க வேண்டும் என்றும், செயல்பாட்டின் மூலம் மாணவர்கள் தற்கால நடைமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் காந்தி கருதினார்.எழுத்துக்களைக் கற்பிப்பதும் வாசிக்கக் கற்பதும் குழந்தைகளின் அறிவுசார் வளர்ச்சியைத் தடுக்கிறது என காந்தி உணர்ந்தார். அவர்கள் வாழும் சமூகத்தின் நிலைமைகள் மற்றும் வரலாற்றை அறிந்த பின்னரே எழுத்துக்களைக் கற்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காந்தி ஆங்கிலக் கல்வியை முற்றிலும் எதிர்த்தார். ஆங்கிலக் கல்வியின் மீதான வெறுப்பு அவரது எழுத்துக்களில் தெரிகிறது. மக்கள் பேசும் மொழிகளில் அறிவை வளர்ப்பதில் அவரது அழுத்தம் இருந்தது. வட்டார மொழியில் உள்ள வளங்களைப் போற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார். அதே நேரம் உலகின் பிற மொழிகளில் உள்ள அறிவார்ந்த தகவல்கள் நல்ல மொழிபெயர்ப்புகள் மூலம் நம் நாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட கல்வி முறையை காந்தி எதிர்த்ததோடு அதற்கு மாற்றாக சுதேசி கல்விமுறையை முன்வைத்தார்.அதில் பள்ளி அளவில் கைவினைப் பொருள்களை உற்பத்திசெய்து அதன்மூலம் கல்வி நிறுவனங்கள் தற்சார்பு அடையும் என்று எண்ணினார். கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். தொடக்கக் கல்வியைப் போலவே உயர்கல்வி குறித்தும் காந்தியடிகள் சிந்தித்தார்.உயர்கல்வி பற்றிய காந்தியின் கருத்துக்கள் தேவை அடிப்படையிலானவை. அவரைப் பொறுத்தவரை, நாட்டின் சுதந்திரத்திற்காக வாழ்ந்து மடியும் மக்களின் உண்மையான ஊழியர்களாக மாறுவதே பல்கலைக்கழகக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கருதினார்.

காந்தி கல்லூரிக் கல்வியை புரட்சிகரமாக மாற்றவும், அதைத் தேசிய தேவைகளுடன் தொடர்பு படுத்தவும் திட்டமிட்டார். மாணவர்கள் கல்விக்காகப் பிற நாடுகளுக்குச் செல்வதை காந்தி விரும்பவில்லை. சொந்த மண்ணில் இருந்து பெறும் அனுபவமே வளமானதாகவும், வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பதாகவும் அவர் கருதினார்.

காந்தி தனது கல்வி பற்றிய பேச்சுகளில் ஆசிரியர்களின் பங்கை மிகவும் வலிமையானதாக எடுத்துரைத்தார். காந்தி தனது கல்வித் திட்டத்தில் , பள்ளியின் தினசரி பாடத்திட்டத்தை நிர்வகிப்பதில் ஆசிரியருக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கிட வழிவகுத்தார்.

ஒரு கல்வி அமைப்பில் வேறு எவரையும் விட ஆசிரியருக்கு மிகப் பெரிய பொறுப்புகள் இருப்பதாகவும், கற்பவர்களிடையே மதிப்புகளை வளர்க்க ஆசிரியர் தேவை என்றும் காந்தி கருதினார். ஆசிரியர் மாணவர்களிடம் ஒழுக்க விழுமியங்களை விதைக்க வேண்டும் என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, அவர்களுடன் ஒன்றாகிவிட்டால் அவர்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்கிறார். தன் சீடர்களிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவன் மதிப்பற்றவன். யாரிடமாவது பேசும் போதெல்லாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன். நான் அவருக்கு கொடுப்பதை விட அதிகமாக அவரிடம் இருந்து எடுத்துக்கொள்கிறேன். இந்த வழியில், ஒரு உண்மையான ஆசிரியர் தன்னை தனது மாணவர்களின் மாணவனாகக் கருதவேண்டும். இந்த மனப்பான்மையுடன் உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் கற்பித்தால், அவர்களிடமிருந்து நீங்கள் அதிகம் பயனடைவீர்கள்’ என்று காதி வித்யாலயா மாணவர்களிடம் உரையாற்றும்போது காந்தி கூறினார்.

மாணவர்களின் ஆளுமையில் மட்டும் கவனம் செலுத்தாமல், ‘முழு மனிதனாக’ வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட காந்தியின் கல்வியே உண்மையான கல்வியாகும். அவர் கல்வியை ஒரு உயர்ந்த தார்மீக நடவடிக்கையாகக் கருதினார். காந்தி ஐந்து மனித விழுமியங்களை வலியுறுத்தினார், இது 1986 இல் தேசிய கல்விக் கொள்கையில் சேர்க்கப்பட்டது. இந்த மதிப்புகள் (1) தூய்மை (2) உண்மைத்தன்மை (3) கடின உழைப்பு (4) சமத்துவம் (5) ஒத்துழைப்பு. என்பதாகும். மிகப்பெரிய மாற்றங்களுக்கு கல்வி குறித்த காந்தியின் சிந்தனைகள் மிகவும் இன்றியமையாததாகின்றன.

The post மகாத்மா காந்தியும் கல்வியும் appeared first on Dinakaran.

Read Entire Article