
சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஏற்ற நாளாக மகா சிவராத்திரி இருந்தாலும், அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என சொல்லப்படுகிறது. அந்த நேரம், மூன்றாம் கால பூஜை நடைபெறும் நேரமாகும்.
சிவராத்திரியின் நான்கு கால பூஜையில மூன்றாம் கால பூஜை மிகவும் முக்கியமானதாகும். இது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெறும். இந்த மூன்றாம் காலத்தின் முதல் 50 நிமிடங்கள் மிக மிக முக்கியமானதாகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜைக்கு நிஷித கால பூஜை என்று பெயர். இதுதான் சிவபெருமானை வழிபடுவதற்கு மிக மிக ஏற்ற நேரமாகும்.
இந்த ஆண்டு நாளை (26.2.2025) மாலை 6 மணிக்கு மகா சிவராத்திரி கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில், இரவு 12.09 மணி முதல் 12.59 மணி வரையிலான நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. இந்த நேரத்தில் சிவனிடம் எந்த வேண்டுதலை முன்வைத்தாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மகா சிவராத்திரியின் மூன்றாம் கால பூஜை என்பது, பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்ட காலமாகும். இந்த சமயத்தில் வழிபட்டால் சிவபெருமானின் அருளும், பர்வதி தேவியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த காலத்தை 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வார்கள். இந்த காலத்தில்தான் சிவபெருமானின் அடி முடியை காண்பதற்காக பிரம்மனும், விஷ்ணுவும் சென்றனர். இந்நேரத்தில் சிவனை பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது. சக்தியின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் லிங்கோற்பவ காலத்திலாவது கண்விழித்து பூஜை செய்வது நன்மை பயக்கும்.