மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவிக்கு அலர்ஜி பாதிப்பு

11 hours ago 4

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரையிலான 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென் பாவெல்(61) இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார்.

முன்னதாக வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் லாரென் பாவெல் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். ஆன்மிக குரு கைலாஷ் ஆனந்த் கிரி என்பவரது ஆசிரமத்தில் தங்கியிருக்கும் லாரென், இன்று மகா கும்பமேளா நடைபெறும் பகுதிக்கு வந்தார். இந்நிலையில், அவருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆன்மிக குரு கைலாஷ் ஆனந்த் கிரி கூறுகையில், "திரிவேணி சங்கமத்தில் நடக்கும் நீராடுதல் நிகழ்வில் லாரென் கலந்து கொள்வார். அவருக்கு லேசான அலர்ஜி பாதிப்பு இருக்கிறது. இவ்வளவு கூட்ட நெரிசல் மிகுந்த இடத்திற்கு இதுவரை அவர் சென்றதில்லை. அவர் மிகவும் எளிமையானவராக உள்ளார்" என்று தெரிவித்தார்.

லாரென் பாவெல் வரும் 15-ந்தேதி(நாளை) வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என்றும், அதன்பின்னர் அமெரிக்காவிற்கு செல்லும் அவர், 20-ந்தேதி நடைபெற உள்ள டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article