பிரயாக்ராஜ்,
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். கடந்த 13-ந்தேதியில் இருந்து இதுவரை புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 27 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தை அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் அதிகாலையில் திரிவேணி சங்கமத்தில் நீராட 7 கோடியே 64 லட்சம் பேர் திரண்டனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளு மற்றும் நெரிசல் காரணமாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேர், மேற்குவங்காளத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 30 பக்தர்கள் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 36 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையடுத்து இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாதவாறும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தவிரட்டுள்ளார். அதன்படி அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதுபற்றி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அன்சுமன் மிஸ்ரா கூறுகையில், கங்கையில் நீராட வரும் கூட்டம் முழுமையும் கலைந்து செல்லும்வரை, அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சூழ்நிலையைப் பொறுத்து வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
கும்பமேளா நடைபெறும் பகுதியில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க கடந்த 2019-ம் ஆண்டு கும்பமேளாவில் கோட்ட ஆணையாளராக பணியாற்றிய ஆஷிஷ் கோயல், ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் பானு கோசுவாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிறப்பு செயலாளர்கள் நிலையில் உள்ள 5 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வருகிற 12-ந்தேதி வரை அங்கு இருந்து நிலைமையை கண்காணிப்பார்கள். நெரிசல் விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங், டி.ஜி.பி. பிரசாந்த் குமார் ஆகியோர் பிரயாக்ராஜ் வந்துள்ளனர் என்று கூறினார்.
இதற்கிடையே வருகிற 3-ந்தேதி பசந்த் பஞ்சமி வருவதால், அன்றும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகளை போலீசாரும் செய்து வருகிறார்கள்.