![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39243898-accident.webp)
கோட்டா,
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகின்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு 57 யாத்ரீகர்கள் பஸ்சில் மத்திய பிரதேசத்தின் மந்த்சவுருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று காலை 6.30 மணியளவில் அந்த பஸ் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கரோடியா கிராமத்திற்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உதவி துணை ஆய்வாளர் ஹரிராஜ் சிங் கூறுகையில், பஸ் டிரைவர் தூங்கிவிட்டதால் விபத்து நடத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விபத்துக்கு பிறகு டிரைவர் தப்பி ஓடியதால் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கிஷோரிலால் (60), அவரது மனைவி கைலாஷிபாய் (54), மற்றும் அசோக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.