
பிரயாக்ராஜ்,
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையடுத்து நிறைவு விழாவுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடும் பிரமாண்ட திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பிரயாக்ராஜில் வந்து தங்கியுள்ளனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலை அலையாக வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், சினிமா பிரபலங்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர உத்தரபிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சத்தீஷ்கார் உள்பட பல்வேறு மாநில சிறைக்கைதிகளுக்கும் புனிதநீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள தொட்டிகளில் ஊற்றப்பட்ட புனித நீரில் நீராடினர்.
கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சி இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜிக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரம் நேற்றைய தினமே ஏராளமானோர் பிரயாக்ராஜ் நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் மேற்கொண்டு நகரமுடியாமல் அப்படியே நிற்கின்றன.
எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், எந்த வித அசம்பாவித சம்பவமும் இன்றி நடத்துவதற்கு மாநில அரசும், மகா கும்பமேளா குழுவினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியில் இருந்து பிரயாக்ராஜிக்குள் நுழைய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பக்தர்களும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் நுழைவுப் புள்ளிகளின் அடிப்படையில் அருகில் உள்ள படித்துறைகளில் மட்டுமே புனித நீராட வேண்டும். அதேபோல் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும்.
புனித நீராடிய பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் முக்கிய பகுதிகளில் பக்தர்கள் தேவையின்றி கூடுவதையும், அதனால் ஏற்படும் நெரிசலும் தவிர்க்கப்படும்.
வழிபாடுகள் முடித்தவுடன் உடனடியாக பக்தர்கள் தங்கள் இடங்களுக்குத் திரும்ப வேண்டும். மகா கும்பமேளா இன்று நிறைவு பெறுவதால் நேற்று முதல் ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் விடிய விடிய புனித நீராடினர். ருத்ராட்ச மாலைகள், புனித நீர் கலசங்கள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனையாளர்கள் இரவு முழுவதும் வியாபாரத்தில் மும்முரமாக இருந்தனர்.