
வதோதரா,
மகளிர் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் உமா சேத்ரி (24 ரன்கள்) மற்றும் தீப்தி சர்மா (39 ரன்கள்) பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினர்.
20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய உ.பி.வாரியர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா 39 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், ஆஷ்லே கார்ட்னர் மற்றும் டியாண்ட்ரா டாட்டின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்க உள்ளது.