மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி; மும்பை-டெல்லி இன்று மோதல்

2 hours ago 2

மும்பை,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கியது. இதில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத் ஜெயண்ட்ஸ் 3வது இடம் பிடித்தது.

நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 4-வது இடமும், உ.பி.வாரியர்ஸ் கடைசி இடமும் பெற்று நடையை கட்டின. நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்ஸை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டியது.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் டெல்லி களம் இறங்கும். அதேவேளையில் டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியனாக மும்பை அணி முயற்சிக்கும்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article