மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. மும்பையை வீழ்த்தி டெல்லி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மும்பை, உத்தரபிரதேசம், பெங்களூரு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் மோதிய 2025ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த மும்பை-டெல்லி அணிகள் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி தனது முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2 சீசனிலும் பைனலில் தோல்வி அடைந்த டெல்லி இந்த முறை பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளதால் அந்த அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையை பொறுத்த வரை வெஸ்ட் இண்டீசின் மாத்தியூஸ், நியூசிலாந்தின் அமீலியா கெர், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் பிரண்ட் என அதிரடி ஆல்ரவுண்டர்களுடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் செம பார்மில் இருப்பதால் மும்பை முழு பலத்துடன் காணப்படுகிறது.
மெக் லேனிங் தலைமையிலான டெல்லி அணியை பொறுத்த வரை பேட்டிங்கில் மிரட்ட ஷபாலி வர்மா, லேனிங், ரோட்ரிக்ஸ் உள்ளனர். மேலும் ஆல்ரவுண்டர்களில் ஆஸ்திரேலியாவின் சதர்லேண்ட் மற்றும் ஜோனஸன், தென் ஆப்பிரிக்காவின் மரிசேன் கேப் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இந்தநிலையில் 2வது முறையாக மும்பை கோப்பை வெல்லுமா, அல்லது மும்பையை வீழ்த்தி தனது முதல் கோப்பையை டெல்லி கைப்பற்றுமா என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியியல் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
The post மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி தொடங்கியது: பலம் வாய்ந்த மும்பை – டெல்லி அணிகள் மோதல் appeared first on Dinakaran.