
பார்படாஸ்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இதையடுத்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 98 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜானிலியா கிளாஸ்கோ 53 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசேன் கேப் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.