
துபாய்,
13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடர் முதலில் இந்தியாவில் மட்டுமே நடைபெற இருந்தது. ஆனால் ஆண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அதற்குரிய போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டன. அதன்படி பாகிஸ்தானும் இந்தியாவுக்கு செல்லாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-யிடம் முறையிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான ஆட்டங்கள் இந்தியாவின் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களிலும், இலங்கையின் கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளன. பெங்களூருவில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 5ம் தேதி விளையாடும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், செப்டம்பர் 30ம் தேதி இலங்கையும், அக்டோபர் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், அக்டோபர் 12ம் தேதி ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 19ம் தேதி இங்கிலாந்தையும், அக்டோபர் 23ம் தேதி நியூசிலாந்தையும், அக்டோபர் 26ம் தேதி வங்காளதேசத்தையும் எதிர்கொள்ளும் வகையில் அட்டவணை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.