வதோதரா: 2025ம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர் பெத் மூனி 42 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை சேஸ் செய்து வென்றதில்லை என்ற நிலையில் வரலாறு படைக்கும் நோக்கத்தில் பெங்களூரு பேட்டிங் ஆடியது. அந்த அணியின் எல்லீஸ் பெரி 34 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளிக்க ராக்வி பிஸ்ட் நிதானமாக ஆடி 27 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ரன்ரேட் அதிகமாக தேவைப்பட ரிச்சா கோஷ் களம் இறங்கினார். எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கிய கோஷ் பந்தை நாலாப்பக்கமும் சிதறடித்தார்.
ருத்ரதாண்டவம் ஆடிய கோஷ் 27 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவருடன் ஜோடி சேர்ந்த கனிகா அகுஜா அதிரடியாக ஆடி தன் பங்கிற்கு 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதனால் 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரிச்சா கோஷ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
The post மகளிர் ஐபிஎல் தொடர்; குஜராத்தை அடித்து நொறுக்கிய பெங்களூரு: ரிச்சா கோஷ் ருத்ரதாண்டவம் appeared first on Dinakaran.