
தூத்துக்குடி,
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது சுமார் 1 கோடியே 34 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் 9000 கோரிக்கை முகாம்கள் நடைபெறும் எனவும், அப்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக தகுதியுள்ள மகளிர் விண்ணப்பிக்கலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வரும் ஜீன் மாதம் 4-ஆம் தேதி மக்களுடன் முதல்வர் என்கிற முகாம்களில் விடுபட்டவர்கள் முறையான ஆவணங்களுடன் இம்முகாம்களில் விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, மொத்தம் 9,000 முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.
அந்த முகாம்களுக்கு சென்று ஏற்கனவே திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். அதைப்போல விண்ணப்பம் செய்யாமல் இருந்த பெண்கள், தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். தகுதியுள்ள பெண்கள், விண்ணப்பிக்க நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.