சிட்னி,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே, மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றி ஆஷஸ் தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டிக்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 75 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் லாரென் பெல், சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 57 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோபியா டங்க்லி 59 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜார்ஜியா வரேஹாம் 3 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 23ம் தேதி கான்பெர்ராவில் நடக்கிறது.