பெருங்களத்தூர்: சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண மகள் விரும்பியதால், மகளின் ஆசையை நிறைவேற்ற அழைத்துச் சென்ற தாம்பரம் அரசு மருத்துவமனை ஊழியரான சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் பெருங்களத்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்.6) பிரம்மாண்டமாக வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார்15 லட்சம் பேர் திரண்டனர். அந்த வகையில் புது பெருங்களத்துரை சார்ந்த ஸ்ரீனிவாசன் (48) தன் மகளுடன் நிகழ்ச்சியைக் காணச் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறத் தொடங்கியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெயிலும் அதிகமாக இருந்ததால் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அதில் 5பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில் சீனிவாசனும் ஒருவர். இவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு மகன் ஹேமந்த் (15) 11ம் வகுப்பு, மகள் வர்ஷா (11) 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.