மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

2 months ago 13

கோவை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 39). இவருடைய மனைவி வத்சலா (35). இவர்களுக்கு சுரேஷ் (7) என்ற மகன் இருந்தான். சுரேசுக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும் அவனுக்கு காய்ச்சல் சரியாகவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பெற்றோர் மிகவும் சோகத்தில் இருந்தனர்.

பழனிசாமியின் அண்ணன் முருகேசன், கோவை அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர், மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தனது தம்பி பழனிசாமி மற்றும் வத்சலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேடப்பட்டிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்ததும் பழனிசாமி மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். வத்சலா தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் தம்பதி இருவரும் கடந்த 3-ந் தேதி காந்திபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலையில் இருந்து அந்த தம்பதி வெளியே வரவில்லை. மதியமும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை தட்டினர். பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பழனிசாமி - வத்சலா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர்.

லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், "எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம். இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் சென்று விடுகிறோம்" என்று அதில் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Read Entire Article