
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. இத்தாலியில் நடைபெறவுள்ள 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தை போன்று அவருடைய மகன் ஆத்விக்கும் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். விளையாட்டில் ஆர்வம் உடைய ஆத்விக், சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டினோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், மகன் ஆத்விக்கிற்கு சென்னையை அடுத்துள்ள இருங்காட்டு கோட்டையில் உள்ள கார்பந்தய ட்ராக்கில் அஜித் ரேஸ் கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.