கிச்சலி சம்பா தமிழகம் முழுதும் அனைத்து இடங்களிலும் விளையக்கூடிய நெல் ரகம். தற்போது புழக்கத்தில் உள்ள குறுவைப் பயிர் ரகங்கள் போலவே சிறிதாக இருக்கும். பொன்னி போன்ற நவீன ரக அரிசிப் பயன்பாட்டில் இருந்து பாரம்பரிய அரிசிப் பழக்கத்துக்கு மாற விரும்புபவர்கள் கிச்சலி சம்பாவில் இருந்து தொடங்கலாம். அளவும் நிறமும் சுவையும் அதேபோன்று இருக்கும். கிச்சலி சராசரியாக 135 நாளில் அறுவடைக்குத் தயாராகும். ஆடி மாத விதைப்புக்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களில் இதுவும் ஒன்று. சுமாராக நாலரை அடி உயரம் வரை வளரும். இதன் அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். கதிர் முற்றிய நிலையில் பெருங்காற்று வீசினாலும் சாயாது நிற்கும் இயல்புடையது. ஆனால், மழை வெள்ளத்தில் ஓரளவே தாக்குப் பிடிக்கும். சாய்ந்தாலும் இதன் நெற்கதிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. அறுவடையும் குறையாது. இதன் வைக்கோல் மாடுகளுக்கு ஊட்டச்சத்து மிக்க தீவனம். ‘அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு’ என்ற வேளாண் முதுமொழிக்கு ஏற்ப இது உரமாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது.ஒரு ஏக்கர் நிலத்தில் கிச்சலி சம்பா விதைக்க 10 சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். பாத்தி முழுவதும் விழுமாறு ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து தூவி விட வேண்டும். விதை நேர்த்தி செய்ய மூன்று கிலோ விதை நெல்லுடன் அரை கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு, அதை நாற்றங்காலில் தூவி விட வேண்டும். தினமும் தண்ணீர் தெளிப்பது நல்லது.
விதைத்த மூன்றாம் நாளில் இருந்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தொடர்ந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான ஜீவாமிர்தம் தயாரிக்க, பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) இரண்டு கிலோ, தண்ணீர் இரு நூறு லிட்டர் ஆகியவற்றுடன் ஒரு கைப்பிடி விளைநிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மர நிழலில் வைத்திருக்க வேண்டியது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை குச்சி கொண்டு கலக்கிவிட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீரிலேயே கலந்து விடலாம். இதனால் முளைப்புத் திறன் அதிகரிக்கும். முளைத்து வந்தவுடன் 22ம் நாள் அல்லது அதற்கு அடுத்த நாட்களில் எடுத்து வயலில் நடவு செய்ய வேண்டும். நாற்று நடவு செய்த 15 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். களைகளை 30ம் நாளில் அகற்ற வேண்டும். நெற்கதிர், பால் பிடிக்கும் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பது நல்லது. மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்க காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை, தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்துக்கொண்டு அதை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டு கோமியம் கலந்து ஏழு நாட்களுக்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
கோமியம் பயிர்களுக்கு ஒரு நல்ல கிருமிநாசினியாக செயல்படும். இதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் பயிர்களைத் தாக்காது. ஏழு நாட்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதையும் வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம். சுமார், 135ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். கதிர் முற்றிய பிறகு, நிலத்தைக் காயவிட்டு அறுவடை செய்யலாம். இதில் சராசரியாக ஏக்கருக்கு 30 மூட்டை வரை நெல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நெல்லை அரைத்தால் 15 மூட்டை அரிசி கிடைக்கும்.
கிச்சலி சம்பாவின் மேற்புறத் தவிட்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. இதனால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், செரிமானக் குறைபாடு உடையவர்களுக்கு மிகவும் ஏற்றது. தற்போது பல தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிச்சலி சம்பா கஞ்சிதான் உணவாகத் தரப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும் கிச்சலி சம்பா மிகச் சிறப்பானது.
வயிற்றின் உட்புறம் உள்ள புண்களை ஆற்றும் தன்மை உடையது. அல்சர் பிரச்சனை உடையவர்களுக்கு மிகச் சிறந்த உணவு. மேலும், ரத்தத்தில் குளுக்கோஸ் சேரும் கிளைசெமிக் இண்டக்ஸ் இதில் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. புற்றுநோய், இதய நோய்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் குறைபாடு போன்ற தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டு தளர்ந்திருப்பவர்களுக்கும் ஏற்ற ரகம் இது.
The post மகத்துவம் மிகுந்த கிச்சலி சம்பா! appeared first on Dinakaran.