திந்தூரி,
மத்திய பிரதேசத்தில் கடசராய் பகுதியில் முதன்மை சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த 30 வயது வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அவருடைய ரத்த கறை படுக்கையில் இருந்துள்ளது. இதனை அவருடைய மனைவியை விட்டு தூய்மை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. படுக்கையை அந்த பெண் தூய்மை செய்யும் வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, முதன்மை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியான டாக்டர் ரமேஷ் மராவி, அந்த மையத்தின் அதிகாரியான ராஜ்குமாரி மர்கார் மற்றும் பெண் உதவியாளரான சோட்டி பாய் தாக்குர் ஆகிய 2 பேரை உடனடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டு உள்ளார். அந்த மையத்தின் மருத்துவ அதிகாரி சந்திரசேகர் சிங், அடுத்த உத்தரவு வரும் வரை கரன்ஜியா சமூக சுகாதார மையத்தில் பணியாற்றும்படி உத்தரவு பிறப்பித்து பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தூய்மை பணிக்காக அந்த மையத்தில் பிற வசதிகள் செய்யப்பட்டு இருந்தபோதும், மரணம் அடைந்த நபரின் மனைவியை சுத்தம் செய்ய வைத்தது துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என அதுபற்றி வெளியிடப்பட்ட நோட்டீஸ் தெரிவிக்கிறது.
நிலத்தகராறில் திந்தூரி மாவட்டத்தின் லால்பூர் கிராமத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்டனர். மற்றொரு மகனான ரகுராஜ் மராவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவருடைய படுக்கையை அவருடைய மனைவி சுத்தம் செய்யும் வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியது. இந்த கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள 3 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.