சென்னை: சென்னையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையால் கடநத் 2024ம் ஆண்டு ரவுடிகள் தொடர்பான குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும் கடந்த ஜூலைக்கு பிறகு ரவுடிகள் கொலைகள் எதுவும் நடைபெற வில்லை. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவுப்படி பெருநகர காவல் எல்லையில் ரவுடிகள் பழிவாங்கும் கொலைகள், முன்விரோதக் கொலைகள் முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் முதல் முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவில் புதிதாக உதவி கமிஷனர் தலைமையில் ‘ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு’ தொடங்கப்பட்டது. இந்த புதிய பிரிவானது சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி கேட்டரியாக ரவுடிகளை தரம் பிரித்து அவர்களின் குற்றவழக்குகள் விபரங்களை சேகரித்தனர். அதேநேரம் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கொடுஞ்செயல் குற்றவாளிகளின் விபரங்களும் பெற்று அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கமிஷனர் அருண் எடுத்த அதிரடியால் சென்னையில் ஏ மற்றும் ஏபிளஸ் ரவுடிகள் அனைவரும் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். இருந்தாலும், அவர்களை விடாமல் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு தனிப்படையினர். ஏ மற்றும் ஏபிளஸ் ரவுடிகளை வெளிமாநிலங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை உதவியுடன் கைது செய்து வருகின்றனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான ரவுடி சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணா ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய பெருநகர காவல்துறை இன்டர் போல் போலீஸ் உதவியுடன் நடவடிக்ைக எடுத்து வருகிறது. கடந்த ஜூலை 8ம் தேதிக்கு பிறகு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களின் பிணை ரத்து செய்யப்பட்டும் மற்றும் அவர்கள் மீதுள்ள வழக்குகளில் சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுத்ததன் காரணமாக ரவடி கொலைகள் எதுவும் நடைபெறவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு 469 குற்றவாளிகளும் 2023ம் ஆண்டு 714 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு 591 ரவுடிகள், 79 திருட்டு வழக்கு குற்றவாளிகள், 300 போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் உட்பட மொத்தம் 1,302 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். அதோடு இல்லாமல் கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரவுடிகள் வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று ஒவ்வொரு வாரமும் கையெப்பம் பெற்று அறிக்கை அளித்து வருகின்றனர். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்ட புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு’ உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினரை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ்கள் வாங்கினார்.
The post போலீஸ் கமிஷனர் அருண் பதவி ஏற்ற பின் ரவுடிகள் தொடர்பான குற்றங்கள் குறைந்தன: கடந்த ஜூலைக்கு பிறகு ரவுடிகள் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை appeared first on Dinakaran.