
கடலூர்,
கடலூர் மாவட்டம் வடலூர் மேலகொளக்குடியை சேர்ந்தவர் ராஜகுரு. இவர் நேற்று முன்தினம் தனது பாட்டியின் துக்க நிகழ்ச்சிக்காக மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது கருங்குழி டாஸ்மாக் கடை எதிரே அதே ஊரை சேர்ந்த கேசவபெருமாள் மகன் மூட்டைபூச்சி என்ற சம்பத்குமார் என்பவர் சத்தம் போட்டுக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதை பார்த்த ராஜகுரு ஏன் சத்தம் போடுகிறீர்கள், வீட்டுக்கு போங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத்குமார் ராஜகுருவை ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி ராஜகுரு வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பத்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்வதற்காக கருங்குழி பாலம் அருகே சம்பத்குமாரை அழைத்து சென்ற போது, திடீரென அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி பாலத்தில் இருந்து கீழே குதித்தார். அப்போது அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பிடித்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 37 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.