சென்னை: போலியான கொள்முதல் பில் கொடுத்து ரூ.1 கோடியே 71 லட்சம் மோசடி செய்த வழக்கில் எண்ணெய் வியாபாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் எண்ணெய் வியாபாரம் செய்து வருபவர் வாசுதேவன். இவர் கடந்த 2000-01 காலக்கட்டத்தில் வால்மீகி நகரில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் போலி கொள்முதல் பில்களை கொடுத்து ரூ.2 கோடியே 4 லட்சத்து 41,300 கடன் பெற்றுள்ளார். இதற்கு அப்போது அந்த வங்கியின் உதவி பொது மேலாளராக பணியாற்றிய ரமேஷ், கிளை மேலாளர் நிர்மலா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதையடுத்து வங்கிக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் வங்கியின் உதவி பொது மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் நிர்மலா, எண்ணெய் வியாபாரி வாசுதேவன், அவரது ஊழியர்கள் பழனி, வெற்றிவேல் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளிலும் வங்கி மேலாளர்கள் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் அனைத்து சாட்சியங்கள், ஆவணங்களுடன் 2003ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணை காலத்தில் பழனி மரணடைநத்தால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் வாசுதேவனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. வெற்றிவேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும், வங்கி உதவி பொதுமேலாளர் ரமேஷ் மற்றும் கிளை மேலாளர் நிர்மலாவுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
The post போலி கொள்முதல் பில் கொடுத்து ரூ.1.7 கோடி மோசடி எண்ணெய் வியாபாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: ரூ.1 கோடி அபராதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.