சென்னை: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. இச்சூழலில், எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களைத் தாக்குவதற்கு பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களைக் காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.