
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம் ரத்தன்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. வான்வெளியில் தடுமாறியபடி பறந்து வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. கிராம மக்கள் அளித்த தகவல் படி சம்பவ இடத்திற்கு, போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி, இடிபாடுகளில் சிக்கியிருந்த விமானியின் சடலத்தை மீட்பு படையினர் மீட்டனர். மற்றொரு விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார். விமானம் விழுந்ததால் வயல்வெளியில் பற்றி எரிந்த தீயை கிராம மக்கள் அணைத்தனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த விமான விபத்தில் பலியான விமானிகளில் ஒருவரான லோகந்தர் சிங்கிற்கு கடந்த மாதம்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்க்க விடுமுறை எடுத்து சென்றவர் கடந்த 1 ஆம் தேதிதான் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில், விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தவர் விமான விபத்தில் உயிரிழந்த்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.