புதுடெல்லி: போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட இந்திய துறைமுகங்களுக்கு பாதுகாப்பு மட்டம்: 2 எச்சரிக்கையை விடுத்து இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றங்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையால், நாட்டின் அனைத்து துறைமுகங்கள், துறைமுக முனையங்கள் மற்றும் கப்பல் கட்டுமான தளங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ஐஎஸ்பிஎஸ்) விதிமுறைகளின்படி, கப்பல்கள், துறைமுகங்கள், முனையங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள், கடற்கொள்ளை மற்றும் பிற பாதுகாப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் வகையின் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் (லெவல்) 1: இயல்பு நிலை, அனைத்து கப்பல்கள் மற்றும் துறைமுகங்களும் வழக்கமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் 2: உயர்ந்த பாதுகாப்பு அபாயம் உள்ள சூழலில், கூடுதல் கண்காணிப்பு, ஆய்வுகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.
ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம் 3: தீவிரவாத அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் அபாயம் உள்ளபோது, தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகள், கப்பல் நிறுத்துதல் மற்றும் முழு கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்களை அடுத்து, நாட்டின் அனைத்து துறைமுகங்கள் மற்றும் கப்பல் கட்டுமான தளங்களில் ஐஎஸ்பிஎஸ் பாதுகாப்பு மட்டம்: 2 அமல்படுத்தப்பட்டது. அதனால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த உத்தரவின் மூலம், நாட்டின் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தியக் கொடியுடன் கூடிய அனைத்து கப்பல்களும், இந்த உயர்ந்த பாதுகாப்பு மட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. முந்த்ரா துறைமுகத்தில் கப்பல் நிறுத்துதல் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, காந்தலாவில் கப்பல்கள் விளக்குகளை அணைக்கவும், பகல் நேரம் வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் 7,517 கிமீ கடற்கரை மற்றும் சென்னை உட்பட 13 முக்கிய துறைமுகங்கள், 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உயர் எச்சரிக்கை நிலவுவதால், துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு வீரர்கள், ரேடார் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 95% வர்த்தகம் கடல் வழியாக நடைபெறுவதால், துறைமுகங்களின் பாதுகாப்பு தேசிய பொருளாதாரத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
The post போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால் சென்னை உட்பட 200 துறைமுகத்திற்கு பாதுகாப்பு லெவல்: 2 எச்சரிக்கை: கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு appeared first on Dinakaran.