போர் ஓயட்டும்

2 weeks ago 5

காசா பகுதியில் இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கு இடையிலான ரத்தப்போர் என்பது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் உலகப்போருக்கு பிறகு, பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் பாலஸ்தீனம் வந்தது. இங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து தப்பி புலம் பெயர்ந்து வந்த யூதர்கள், சிறுபான்மையினராக வசித்து வந்தனர். நாளடைவில் பாலஸ்தீனத்தில் இருந்து யூதர்களுக்கு தனிநாடு பிரிக்க வேண்டும் என்று யூதக்குழுக்கள் பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது. இதற்கு பாலஸ்தீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், இரண்டாம் உலகப்போர் முடிந்து 3ஆண்டுகளுக்கு பிறகு, 1948ம் ஆண்டு யூத, அரபு பகுதி என்று பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இதற்கு ஒப்புதல் வழங்கியது. ஜெருசலேம் ஒரு கட்டத்தில் சர்வதேச நகரமானது. இந்த நிலையில், 1967ம் ஆண்டு மத்திய கிழக்கு போர் நடந்தது. 6நாட்கள் நடந்த இந்த போரில், கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. இதில் ஒருங்கிணைந்த ஜெருசலேம், தங்கள் தலைநகராக இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அரபுநாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், ‘‘கிழக்கு ஜெருசலேமில் புதிய தலைநகருடன் பாலஸ்தீன அரசு உருவாகும். ஆனால் ஜெருசலேம் பிரிக்கப்படாத தலைநகரமாக இருக்கும்,’’ என்றார். அவரது முடிவை நிராகரிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்தது. இப்படி உலகநாடுகள் மத்தியஸ்தம் செய்த நிலையிலும், இருநாடுகளுக்கும் தொடரும் ஈகோ என்பது தொடர் யுத்தங்களுக்கு வழிவகுத்து நிற்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், காசாவின் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ம்தேதி முதல் அத்துமீறிய தாக்குதலை தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் வரை 43,259 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். 1,01,827 பேர் காயமடைந்துள்ளனர். 24மணி நேரத்தில் காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் மட்டும், 84 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்பது இதயத்தை ரணமாக்கும் தகவல். ெகாள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் பற்றி எதுவும் அறியாத பசுந்தளிர்கள் குழந்தைகள்.

இந்த பூமி என்பது நம்மை பாதுகாத்து வளர்த்ெதடுக்கும் என்ற நம்பிக்கையில் தான், அவர்களின் பிறப்பு இந்த மண்ணில் நிகழ்கிறது. பெற்றோரும், உற்றாரும் அவர்களை சீராட்டி வளர்த்து நம்பிக்கை விதைக்கின்றனர். இந்தச்சூழலில் போர்க்களங்கள் தளிர்களின் நம்பிக்கையை சிதைப்பதோடு, அவர்களையும் பலியாக்குவது தான் காலக்கொடுமை. இந்த நேரத்தில் 1993ம் ஆண்டு பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர்அராபத், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் யிட்சாக் ராபினுக்கு அனுப்பிய கடிதத்தை நினைவுகூர வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த கடிதத்தின் பயனாக ஈகோ துறந்து, யுத்தங்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தும் வகையிலும், அமைதியை நிலைநாட்டவும் ‘ஒஸ்லோ’ ஒப்பந்தம் உருவானது. ‘இனி காலங்கள் மகிழ்ச்சியாகும்’ என்று யாசர் அராபத்தும், யிட்சின் ராபினும் கரம் குலுக்கி மகிழ்ந்தனர். இதனால் சில ஆண்டுகள் இருநாடுகளிலும் யுத்தச்சத்தமும், மரண ஓலமும் கேட்கவில்லை. 30 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் ஒரு யாசர்அராபத்தும், யிட்சாக் ராபினும் வருவார்களா என்பதே இருதரப்பு மக்களின் எதிர்பார்ப்பு என்றால் அது மிகையல்ல.

The post போர் ஓயட்டும் appeared first on Dinakaran.

Read Entire Article