போர் உச்சக்கட்டம்

1 month ago 15

இருதரப்புக்கும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல் போக்கு தொடர்ந்தாலும், கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு அதிரடியான தாக்குதலை நடத்தியது. இதனால் இஸ்ரேலின் ராணுவ தளவாடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், முக்கிய இடங்கள் தகர்க்கப்பட்டன. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஓராண்டை நெருங்கிய சூழலிலும் இருதரப்பிலும் மோதல் தொடர்ந்து நடந்தவண்ணம் இருந்தது.
முதல்கட்டமாக ஹமாஸ்க்கு பெருத்த ஆதரவு தந்து வரும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை காலி செய்ய இஸ்ரேல் திட்டமிட்டது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்களின் பேட்டரிகளை வெடிக்கச் செய்தது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்ததில் ஏராளமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து வாக்கி டாக்கிகளையும் வெடிக்க வைத்து பலரை பலி கொண்டு, விபரீதமான முறையில் சைபர் தாக்குதலை அரங்கேற்றி உலக நாடுகளை அலற வைத்தது.

மேலும், ஹிஸ்புல்லா நிலைகளையும் குறிவைத்து வான்வழி தாக்குதலை நிகழ்த்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூளையாக செயல்பட்ட அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும், அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலால் உயிருக்கு பயந்து 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர தொடங்கினர். மத்திய கிழக்கில் நடந்து வரும் பதற்றமான போர் சூழலை உலக நாடுகளும் அச்சத்துடனே கவனிக்க தொடங்கின. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலையானதற்கு, பழிக்குப்பழியாக இஸ்ரேல் மீது கண்டிப்பாக தாக்குதல் நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில்தான் இஸ்ரேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்த தொடங்கியது. பொறுத்துப் பார்த்த ஈரான், இஸ்ரேலின் முக்கிய நிலைகள் மீது நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் நோக்கி இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஈரான் தரப்பில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டதாக, அந்நாட்டின் அரசு டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் துணையோடு, அந்த ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு கூறி வருகிறது.

சைரன் ஒலிகள், பயங்கர சப்தம் இவற்றால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமலும், பதுங்கு குழிகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கு பதிலடி தரும் விதமாக நேற்று அதிகாலை, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல், வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு இந்த விஷயத்தில் முழு ஆதரவை அமெரிக்கா அளித்து வருகிறது. ஈரானுக்கு தகுந்த பதிலடி தந்தே ஆக வேண்டுமென கோரி வருகிறது. அதே நேரம் ‘போர் மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. உடனடியாக இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இதனால் பொதுமக்களும் அதிக பாதிப்பிற்குள்ளாகின்றனர்’ என சர்வதேச நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. குறிப்பாக, ஐநா சபை போர் நிறுத்தம் கோரியுள்ளது. தரை வழி தாக்குதல், சைபர் தாக்குதல், வான்வழி தாக்குதல் என தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போரால், சர்வதேச அளவில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களை பல வழிகளில் பாதிப்பிற்குள்ளாக்கும் இப்போர் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதே பெரும்பாலான நாடுகளின் விருப்பமாகும்.

The post போர் உச்சக்கட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article