வாஷிங்டன்: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடிக்கிறது. இப்போரை 30 நாளில் முடிவுக்கு கொண்டு வருவதாக இரு நாடுகள் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை. அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், உக்ரைன் நிர்வாகத்தை கவனிக்க வேறொரு தலைமை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போருக்கு பிறகான பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார். இதனால், இருவர் மீதும் அதிபர் டிரம்ப் ரொம்பவே கடுப்பாகி உள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது தனியார் கிளப் மார் எலாகோவில் இருந்தபடி, என்பிசி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘‘பேச்சுவார்தையில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைகிறோம். ஆனாலும், புடின், ஜெலன்ஸ்கி இருவருக்கும் இடையே நிறைய வெறுப்பு இருக்கிறது. ஜெலன்ஸ்கியின் நம்பகத்தன்மை குறித்து புடின் கேள்வி எழுப்புவதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். எனவே ரஷ்யா மீது புதிய தடைகள் விதிப்பது குறித்தும் பரிசீலிப்பேன்’’ என்றார்.
பின்னர் டிரம்ப் அளித்த மற்றொரு பேட்டியில், ‘‘புடினை நான் நீண்டகாலமாக அறிவேன். நாங்கள் நன்றாக பழகி வருகிறோம். புடின் தனது மனதில் போரை நிறுத்த காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார் என்றே நினைக்கிறேன். அதற்காக எங்களை அவர் தாமதப்படுகிறார் என்றால் அதில் நான் மகிழ்ச்சி அடைய மாட்டேன். நேட்டோ படையில் சேர ஜெலன்ஸ்கி விரும்புகிறார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்’’ என்றார். இதன் மூலம் 30 நாளில் டிரம்பால் போரை நிறுத்த முடியாது என்பது தெரிகிறது. அதற்கேற்ப ரஷ்யாவும் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
3வது முறையாக அதிபராக முயற்சி
அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க முடியாது. தற்போது அமெரிக்காவின் பல சட்ட திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கும் டிரம்ப், அரசியலமைப்பிலும் திருத்தம் செய்வார் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவர் அளித்த பேட்டியில், ‘‘நிறைய பேர் என்னிடம் 3வது முறையாக அதிபராவது குறித்து கேட்கிறார்கள். இது ஒன்றும் ஜோக் அல்ல. நிஜம். அதற்கான வழிகளும் உள்ளன. ஆனால் இப்போதைக்கு அது தேவையில்லை. இன்னும் நிறைய காலம் உள்ளது’’ என்றார். இதன் மூலம் 2 முறைக்கு மேல் அதிபராக முடியாது என்கிற அரசியலமைப்பு சட்டத்தையும் டிரம்ப் மாற்றினாலும் மாற்றுவார் என்கிற பேச்சுகள் அடிபடத் தொடங்கி விட்டன. ஏற்கனவே சீனா, ரஷ்யாவில் இதே போன்ற சட்டங்களை மாற்றி ஜின்பிங்கும், புடினும் நிரந்தர அதிபராக வலம் வருகின்றனர்.
The post போரை நிறுத்த ஒத்துவராத ரஷ்ய அதிபர் புடின் மீது டொனால்ட் டிரம்ப் கோபம்: உக்ரைன் அதிபரையும் வறுத்தெடுத்தார் appeared first on Dinakaran.