போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

1 month ago 16

2022ல் செஸ் ஒலிம்பியாட் போட்டி, கேலோ இந்தியா, எப் 4 கார் ரேஸ் என சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதன்மூலம் விளையாட்டு துறையில் தமிழ்நாடு தொடர்ந்து கவனம் பெறுவதுடன், முன்னிலையும் பெற்று வருகிறது. இத்துடன் முடித்துவிடாமல், வருங்காலத்திலும் இதுபோன்ற சர்வதேச போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும், இது சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் நடைபெற வேண்டும், அதற்கேற்ப விளையாட்டு துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் எல்லா பகுதிகளிலும் உருவாக்கப்பட வேண்டும், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான விளையாட்டு மேம்பாட்டு துறையும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடுத்தபடியாக சர்வதேச ஹாக்கி ஸ்டேடியமும் அமைக்க திட்டமிடப்பட்டு தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பி உள்ளது.

சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை’ ஹாக்கி தொடர் நடந்தது. சர்வதேச தரத்தில் 1995ல் அமைக்கப்பட்ட மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில், முதல் 12 ஆண்டுகளில் ‘ஆடவர் ஹாக்கி சாம்பியன்’ கோப்பை தொடர்கள் (1996, 2005), ‘ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை’ (2007) போன்ற பெரிய தொடர்கள் நடைபெற்றன. அதன்பிறகு, இந்த மைதானத்தில் சர்வதேச ஹாக்கி தொடர் எதுவும் நடைபெறவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 2023ம் ஆண்டு சர்வதேச ஹாக்கி தொடர் நடைபெற்றது.

இந்தியாவில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் அளவுகடந்த முக்கியத்துவத்தால், ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டுகள் பின்தங்கி இருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதேநேரம், விளையாட்டு துறையை வளர்க்கும் நோக்கில் சர்வதேச அளவிலான வசதிகளை செய்து தருவதன் மூலம் தழைக்க வைக்க முடியும் என்பதை கருத்தில்கொண்டு, தமிழக அரசு, கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம் ஆகியவற்றை அமைப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை வளாகத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைய உள்ள இடத்தை கடந்த மாதம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதையடுத்து 30.86 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இத்திட்டம் தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கான டெண்டர் கடந்த மாதம் விடப்பட்டது. இந்த டெண்டர் மிக விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது. இதில் தெரிவிக்கப்படும் அம்சங்களின் அடிப்படையில் கிரிக்கெட் மைதானம் கட்டமைக்கப்படும். பல கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக இந்த மைதானம் அமைக்கப்படும். சர்வதேச அளவில் கிரிக்கெட் மைதானங்களை உருவாக்கிய நிபுணர் குழுவினர் மூலமாக இதை வடிவமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் கட்டுமான பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர், சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த, தேவையான வகையில் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கோவையில் கடந்த சில ஆண்டாக கிரிக்கெட் போட்டிகள் அதிகமாக நடத்தப்படுகிறது. டிஎன்பிஎல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை, கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றனர். இதை தவிர்த்து, சர்வதேச அளவிலான போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கிரிக்கெட் ஸ்டேடியத்தை ெதாடர்ந்து ஹாக்கி மைதானமும் கோவையில் உருவாக்கப்படவுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 9.67 கோடி ரூபாய் செலவில் ஹாக்கி மைதானம் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இங்கே 100 மீட்டர் நீளம், 55 மீட்டர் அகலத்தில் மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டது.

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் மைதானம் கட்டும் பணி துவங்கியது. டர்ப் என்ற தரை மற்றும் கேலரி உள்ளிட்ட வசதிகளுடன் பணி நடந்தது. பின்னர் அப்படியே பணியை நிறுத்திவிட்டனர். போதுமான நிதி ஒதுக்காத நிலையில் பணிகள் கைவிடப்பட்டதாக தெரிகிறது. டர்ப் அமைக்க வைக்கப்பட்டிருந்த பல்வேறு தளவாட பொருட்கள் வெயில் மழையால் சேதமானது. முதல்கட்டமாக இங்கே திட்டப்பணிக்காக ₹1.5 கோடி செலவழித்துவிட்டதாக தெரிகிறது. கிடப்பில் போட்ட பணிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ₹19.5 கோடி ஒதுக்கக்கோரி, திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த ‘டுபிட்கோ’ நிறுவனத்தினர், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஹாக்கி விளையாடுவோர் எத்தனை பேர், சர்வதேச போட்டி நடத்தினால் கேலரியில் எத்தனை பேர் அமர முடியும்?, சர்வதேச வீரர்கள் வந்து செல்ல வசதி, தங்கும் இடம், வாகனங்கள் நிறுத்த இட வசதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, நிதி ஒதுக்க மறுத்து விட்டதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த திட்டம் தொடர்ந்து கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்துக்கு உயிரூட்டப்பட்டது. ஹாக்கி மைதான பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டு இருப்பதால், ஹாக்கி மைதானம் அமைக்கும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி மைதானம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கக்கோரி, தமிழக அரசின் நிர்வாக அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியதும் டெண்டர் கோரப்படும். சர்வதேச தரத்துக்கு ‘டர்ப்’ அமைத்து மைதானம் உருவாக்கப்படும். கோவையின் இன்னொரு அடையாளமாக இந்த ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்’’ என தெரிவித்தனர். திமுக அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் வழங்கி வரும் நிலையில் விரைவில் இந்த 2 மைதான பணிகளும் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article