போத்துப்பாறை பகுதியில் காட்டு யானை சில்லிக்கொம்பன் முகாம்; தொழிலாளர்கள் பீதி

10 hours ago 2

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் நெல்லியாம்பதி பாடகிரி, போத்துப்பாறை பகுதிகளில் சில்லிக்கொம்பன் காட்டு யானை முகாமிட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இரவு-பகல் என பாராமல் காட்டு யானை வீட்டு தோட்டங்களிலும், டீ, காபி எஸ்டேட்களிலும் புகுந்து தொழிலாளர்களை விரட்டியபடி உள்ளது. இதனால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் நடமாடி விளைச்சல் பயிர்களை ருசித்து செல்கின்றது. இந்த காரணத்தால் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாமல் பீதியடைந்துள்ளனர். நெல்லியாம்பதி – போத்துண்டி – நெல்லியாம்பதி மலைப்பாதையில் அடிக்கடி வாகனங்களை யானைகள் வழிமறிப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளும் பீதியுடன் பயணிக்கின்றனர்.

சாலையோரங்களில் புல் தரைகளில் புற்களை தீனியாக உண்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் யானைகள், குடிநீர் குடிப்பதை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், காட்டு யானைகளை வீடியோக்கள், புகைப்படங்கள் எடுப்பதை வனத்துறையினர் தடை செய்துள்ளனர். அவை எந்த நேரமும் விரட்டி தாக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லியாம்பதி பாடகிரி, போத்துப்பாறை பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் குடியிருப்பு பகுதிகளில் சில்லிக்கொம்பன் நடமாட்டம் உள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், நெல்லியாம்பதி காட்டுப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக காட்டு யானைகள், சிறுத்தை, காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள், கலா மான்கள், குரங்குகள் ஆகியவை உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி சாலைகள் குறுக்கே கடக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு போத்துண்டி வனத்துறை சோதனைச்சாவடி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post போத்துப்பாறை பகுதியில் காட்டு யானை சில்லிக்கொம்பன் முகாம்; தொழிலாளர்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article