போதையில் விபத்து ஏற்படுத்திய 10க்கும் மேற்பட்டோர் கைது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

3 weeks ago 6

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாங்காடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, ஆவடி, பட்டாபிராம், திருவேற்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளும், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி – திருப்பதி சாலை, தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை என ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளும் அடங்கும். இந்த பகுதிகளில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் வாகன விபத்தில் உயிரிழப்பு குறித்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தும் நபர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் அல்லது நீதிமன்ற ஜாமீனில் விடுவித்து வருவது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2 மாதங்களில் மட்டும் குடித்துவிட்டு வாகன விபத்து ஏற்படுத்திய 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது இந்த நடைமுறை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட செங்குன்றம் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படிப்படியாக மற்ற காவல்நிலைய பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்தி செயல்படுத்த இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை மூலம் குடித்துவிட்டு ஏற்படும் விபத்துகள் குறைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போதையில் விபத்து ஏற்படுத்திய 10க்கும் மேற்பட்டோர் கைது: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article