போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

4 weeks ago 6

சென்னை: சென்னை கிண்டியில் நடைபெறும் தென் பிராந்திய காவல்துறை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது; போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது; கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் இன்றைக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அமைதியான மாநிலம், அங்கு அமைதியின்மையை உருவாக்க எதையாவது பரப்புவீர்களா என யூடியூபர் வழக்கு ஒன்றில் சமூக வலைதளத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் பரவக்கூடிய வதந்திகளைத் தடுக்க மிகுந்த கண்காணிப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநில போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்பட்ட தமிழ்நாடு, கேரள காவல்துறையை பாராட்டுகிறேன்.

குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநில காவல்துறை மற்ற மாநிலத்துக்குச் செல்லத் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையவழி குற்றங்களை தடுப்பதில் மற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்படவேண்டும். தென்கிழக்கு நாடுகளில் கணினிசார் குற்றங்களில் நம் இளைஞர்கள் சிக்கி துன்பப்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் பொது அமைதியை சீர்குலைக்க முயன்றால் அதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சமூக வலைத்தளங்கள் மூலம் பொது அமைதியை சீர்குலைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.

 

The post போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Read Entire Article