போடி, பிப்.10: போடியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆவணமின்றி அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் இச்செயலைக் கண்டித்தும், இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், போடி வள்ளுவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் சன்னாசி, நகர தலைவர் முசாக் மந்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகிளா அணி கிருஷ்ண வேணி வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post போடியில் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.