சென்னை: போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் நாளை மறுநாள் (பிப். 8) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவல நிலை தொடர் கதையாக இருந்து வருகிறது.