தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏராளமான வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியில் இருந்து நேற்று காலை 10 மணி வரை தொடர்ந்து 29 மணி நேரம் மழை பெய்தது.
மதியத்துக்கு மேல் சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. முதல் நாளில் தூறலாக இருந்த மழை இரவில் வலுத்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சிற்றாறு, அனுமன் நதி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.