சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது;
பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களுக்கு நிவாரணத்தை அரசு பெற்று தந்திருக்கிறது என்றார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: அதிமுக வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு மாற்றியதால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. வழக்கை சிபிஐக்கு எடப்பாடி பழனிசாமி மாற்றியதால்தான் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு த.வெ.க. தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியது வரவேற்கத்தக்கது. பாலியல் வழக்குகளை 90 நாட்களுக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு சவுக்கடி தீர்ப்பு: காங்கிரஸ்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சவுக்கடி தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது; நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு.
கொடூர குற்றம் இழைத்தவர்களுக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையானது, பெண்கள் பாதுகாப்பாக உணரவும், வன்கொடுமைகள் இல்லாத சமூகமாக உருவாக காரணமாக அமையும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு வரவேற்கத்தக்கது: பிரேமலதா
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு வழிகாட்டத்தக்கது: கி.வீரமணி
பொள்ளாச்சி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, வழிகாட்டத்தக்கது என 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து அளித்த தீர்ப்புக்கு கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.