பொருளாதாரத்தை ஒளிர வைத்த தீபாவளி!

1 week ago 6

சென்னை,

தீபாவளி என்றாலே தீப ஒளி ஏற்றும் நாள். மக்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்திலும் ஒளி வீச வைத்த நன்னாள். தீபாவளியையொட்டி அரசு பணிகளிலும் சரி, தனியார் நிறுவனங்களிலும் சரி, எல்லோரும் போனஸ் வாங்கியிருந்ததாலும், விவசாயிகளும் நல்ல விளைச்சலைக் கண்டிருந்ததாலும், எல்லோருடைய கைகளிலும் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அதை வைத்து தங்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் அவரவர்களின் நிதி நிலைக்கேற்ப மக்கள் வாங்கியதால் வர்த்தகம் தழைத்தது.

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதியில் வந்தாலும், வர்த்தகம் பெருகி, மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத்துக்குமான சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி வசூல் பெரும் சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாகும். இது ஜி.எஸ்.டி. அமல்படுத்த தொடங்கிய 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து வசூலிக்கப்பட்ட மாதாந்திர தொகையில் இரண்டாவது பெரிய வசூலாகும். இதுவரை ஜி.எஸ்.டி. கண்ட அதிக வசூலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான். அந்த மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலாகி இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்தும் கணிசமான தொகை கிடைத்துள்ளது.

தீபாவளி சமயத்தில் நாடு முழுவதும் இந்த பொருள், அந்த பொருள் என்று இல்லாமல், எல்லா பொருட்களின் விற்பனையும் அதிகமாக இருந்துள்ளது. மோட்டார் வாகனங்களில் கார், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற பயணிகள் வாகனங்களின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது, இந்த கால கட்டத்தில் மட்டும் 4 லட்சத்து 90 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார வாகனங்களை பொருத்த மட்டில் 2.18 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, 56 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இப்போது இருசக்கர மின்சார வாகன விற்பனையும் அக்டோபர் மாதத்தில் ஒரு உயர்வைக் கண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 1.39 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 11 ஆயிரத்து 784 இருசக்கர மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

டிராக்டர் விற்பனையும் அதிகமாக இருப்பதைப்பார்த்தால் விவசாயமும் வளர்ந்து இருக்கிறது, விவசாயிகளும் வருமானத்தை பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதுபோல, பெட்ரோல், டீசல் விற்பனையும் அதிகரித்து இருக்கிறது. தங்க நகைகள் விற்பனை, வெள்ளி பொருட்கள் விற்பனை, ஜவுளி விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை, நிலம், வீடு விற்பனை என்று எல்லாவற்றிலும் உயர்வு இருப்பதால்தான் அது ஜி.எஸ்.டி. வசூலில் பிரதிபலித்துள்ளது. பெரும்பாலான பொருட்கள் யு.பி.ஐ. பணப்பரிமாற்றத்தின் மூலமே வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.23.5 லட்சம் கோடிக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதைப் பார்த்தால், மக்கள் இணையவழி பணப் பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவது தெள்ளத்தெளிவாகிறது. மொத்தத்தில் தீபாவளி பண்டிகை மக்கள் வாழ்வில் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சிலும் ஒரு ஒளியை பாய்ச்சியுள்ளது.

இந்த தீபாவளி நேரத்தில் 117 நகர்புறங்களில் மக்கள் செலவழித்து இருக்கும் தொகை உயர்ந்து இருக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி நேரத்தில் 80.96 என்று இருந்த செலவு குறியீடு இந்த ஆண்டு 117.37 ஆக உயர்ந்திருக்கிறது என்பதில் இருந்தே இதை தெரிந்துகொள்ளலாம். மொத்தத்தில் மக்களின் செலவழிக்கும் திறன் அதிகரித்து இருக்கிறது.

Read Entire Article