பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக அகழ்வாராய்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

1 day ago 2

பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் என்றும், கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக அகழ்வாராய்ச்சி செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 18 இடங்களில் அகழ்வாய்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்திய பூபாகத்தில், தென்னிந்தியாவில் கி.பி. 10ம் நூற்றாண்டிற்கும் முன்னர் கட்டப்பட்டிருக்கக்கூடிய அரண்மனையினுடைய பகுதிகளைக் கண்டறிந்த ஒரேயொரு அகழ்வாய்வு கங்கைகொண்ட சோழபுரம் அகழ்வாய்வு தான். அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்றிருக்கக்கூடிய பல்வேறு தொல்பொருட்களை முறையான வகையில் சர்வதேச வகையில் காட்சிப்படுத்துவதற்கு அருங்காட்சியகங்களை பல இடங்களில் அமைத்து கொண்டு வருகிறோம். மிக முக்கியமாக மதுரை அருகே கீழடி அருங்காட்சியகம் இன்றைக்கு லட்சக்கணக்கான மக்களை தன்னகத்தில் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

அதை தொடர்ந்து பொருநை அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் அதேபோல ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிய அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
பொருநை அருங்காட்சியகப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஏறத்தாழ 70 சதவிகிதப் பணிகள் முடிந்திருக்கிறது. மிக விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டின் தொல்லியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல் கல்லாக இரும்பின் தொன்மையை கண்டறிந்தது அமைந்திருக்கிறது.

சிவகளை, மாங்காடு, மயிலாடும்பாறை, தெலுங்கனூர் ஆகிய இடங்களில் கிடைத்த மாதிரிகளின் காலக்கணக்கீட்டின்படி அந்த ஆய்வின் முடிவில், தமிழ்நாட்டில் தான் இரும்புக்கால பயன்பாடு என்பது இன்றைக்கு 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியதை முதல்வர் அறிவித்தார். கீழடி அகழ்வாய்வகத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டும், அந்த பணிகளுக்கான நில உடைமையாளர்களுக்கு நிதி தருவதற்கு நிதி வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ ரூ.8.2 கோடி அதற்காக நிதி ஒதுக்கி, நில உடைமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சி தலைவருக்கு அந்த நிதி அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் பட்டா மாறுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* கேள்விக்கு எவ்வாறு பதில் தயார் செய்வேன்? சட்டசபையில் துரைமுருகன் சொன்ன சுவாரஸ்ய தகவல்
தமிழக சட்டப்பேரவை நேற்று நீர்வளத்துறை சம்பந்தமான கேள்வியை கும்பக்கோணம் எம்எல்ஏ க.அன்பழகன் (திமுக) கேட்டார். அப்போது அவர், “எங்களது தொகுதியில் 3 அணைக்கட்டு கட்ட வேண்டும். ஒரு அணைக்கட்டாவது கட்ட வேண்டும்” என்றார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன், “முன்பு கேட்ட கேள்வி. தற்போது உறுப்பினர் கேட்கும் கேள்வி வேறு. இந்த மாதிரி நேரத்தில் தனிக் கேள்வி போட்டு இருக்க வேண்டும். அன்பழகனுக்கு ஒரு அணையாவது நான் கட்டி தருகிறேன்” என்றார்.
சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “உங்களின் நீண்ட நெடிய நீர்வளத்துறை அனுபவம் மற்றும் ஞாபக சக்தியை பார்த்து பதில் கிடைக்கும் என்று நம்பி கேள்வி கேட்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து துரைமுருகன் பேசுகையில், “தற்போது கூட ஒரு கேள்விக்கு பதில் தயார் செய்து 2 முதல் 3 மணி நேரத்தில் ஒத்திகை பார்த்து விட்டு தான் வருவேன். இவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கும் போது நான் கூறுவது தவறாக இருக்க கூடாது என்ற பயமும் உள்ளது” என்றார். இவ்வாறு துரைமுருகன் பேசியது பேசியது அவையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

* உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2ம் இடம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2ம் இடம் இடத்தில் உள்ளது என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் ராஜேந்திரன் பதிலளித்து பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாவின் பங்களிப்பை 12 சதவீதமாக உயர்த்துதல், தமிழகத்தில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்துள்ள தொழில்களில் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுற்றுலாக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2020ம் ஆண்டு 14.18 கோடியாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 2024ம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 30,68,42,014 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11,61,302ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்தம் 2024ம் ஆண்டில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30,80,03,316ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாடு மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மருத்துவமனைகளின் உட்கட்டமைப்புகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவ சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பற்றி வெளிநாட்டு மருத்துவ சுற்றுலா பயணிகள் அறியவும் வழிவகுத்தது. இம்மாநாடுகளின் உதவியால் மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. 2024-25ம் நிதியாண்டில் சுற்றுலாத் துறையால் செயல்படுத்தப்பட்ட மற்ற திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் ரூ.9.71 கோடி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள மலைவாசல் தலங்களில் காட்சிமுனைகள் அமைத்தல் மற்றும் மேம்பாட்டிற்கு ரூ.11.47 கோடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் ரூ.3.90 கோடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் ரூ.3.50 கோடி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.5 கோடி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் ஏரிப் பகுதியில் ரூ.4.80 கோடியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

The post பொருநை அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக அகழ்வாராய்ச்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article