
சென்னை,
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த தமிழக வனத்துறை அமைச்சர் க.பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதாவது, தி.மு.க.வில் அவர் வகித்துவந்த துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
ஆனால், அமைச்சர் பதவியில் இன்னும் தொடர்கிறார். இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. மகளிரணி சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. மகளிரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சரோஜா உள்பட அ.தி.மு.க. மகளிரணியினர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தினர்.
அமைச்சர் பொன் முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். அண்மையில் அமைச்சர் பொன்முடி அவதூறாக பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.