சென்னை: மதுரையில் சில நாட்களுக்கு முன் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘போரில் ராணுவ வீரர்கள் எங்கே சண்டை போட்டார்கள். நவீன் தொழில்நுட்பங்கள் கூடிய உபகரணங்களை வாங்கி கொடுத்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களுக்கு தான் நன்றியும், பாராட்டும்..’ என்று கூறியியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இந்நிலையில், தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள், இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களை ஒன்றிணைத்து செயல்படுகின்ற சோழ நாட்டு பட்டாளத்தின் சார்பாக தஞ்சையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பேசிய பேச்சை திரும்பப்பெற்று ராணுவ வீரர்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ராணுவத்தை பற்றி தரக்குறைவாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தேர்தலில் எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் கர்னல் அரசு, மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்லூர் ராஜூ தனது எம்எல்ஏ பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். இதுபற்றி அவரோ, அவர் சார்ந்தோ கட்சியோ உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஒட்டுமொத்த முன்னாள், இந்நாள் ராணுவ குடும்பங்களின் எதிர்ப்பு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படும். ’ என்றார். தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படை நல மற்றும் மறுவாழ்வுச் சங்க முதன்மை செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு பதற்றமான சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராணுவத்திற்கு துணை நிற்போம் என பேரணி ஒன்றை நடத்தியிருந்தார். செல்லூர் ராஜூவ தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்’ என்று கூறி உள்ளார்.
கரூர், அரியலூர் அண்ணா சிலை அருகே செல்லூர் ராஜூவை கண்டித்து முப்படை வீரர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
The post பொது மன்னிப்பு கேட்க வேண்டும்; செல்லூர் ராஜூ தேர்தலில் நின்றால் தோற்கடிப்போம்: ராணுவ வீரர்கள் தீர்மானம் appeared first on Dinakaran.